
அதுல் சுபாஷ் என்பவர் மனைவி டார்ச்சர் செய்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவாக உள்ள அவருடைய மனைவியின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் இதே போன்று ஒரு சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. அதாவது பெங்களூரில் உள்ள காவல் நிலையத்தில் தலைமை காவலராக திப்பண்ணா அலுகூர் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 34 வயது ஆகும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக உள்ளூர் வாசிகள் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் இறப்பதற்கு முன்பாக எழுதிய தற்கொலை கடிதம் சிக்கி உள்ளது. அதில் தன்னுடைய மனைவி மற்றும் மாமனார் யமனப்பனின் தொடர் டார்ச்சரால் நான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். என்னுடைய மாமனார் நீ உயிரோடு இல்லாவிடில் என்னுடைய மகள் நன்றாக இருப்பார் என்று அடிக்கடி கூறுகிறார். இதனால்தான் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியுள்ளார். அதோடு அவர் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் தான் இப்படி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக இறந்தவரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் அதுல் சுபாஷ் மரணத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு மரணம் மனைவி டார்ச்சரால் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.