
அதிமுக கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது கூட்டம் தொடங்கிவிட்டது. அவை தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழு மற்றும் செயற்கழு கூட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்தக் கூட்டத்தின் போது கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட இருக்கிறது. அதன்பிறகு இன்று மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இன்று அதிமுக கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வஞ்சரம் மீன் வறுவல் போன்றவைகள் உணவில் இடம்பெற்றுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட வெளியானது. இது தொடர்பாக அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது கூட்டத்திற்கு வருபவர்கள் யாரும் பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக தான் விருந்து தயாராகிறது என்றார். மேலும் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றிக்கான வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.