நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த நான்கு நாட்களாக இந்திய அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது.

அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லி இருந்தால் அடுத்த 7 ஜென்மத்திற்கு  சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக் கொள்வதில் பாஜக மகிழ்ச்சி அடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் கட்சி பேச வேண்டும் என கூறினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, அதிக பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தை பற்றி கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும், அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை தான் சொல்வார்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.