
சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை பாரதிதாசன் முதல் தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கிருஷ்ணமூர்த்தி வேளச்சேரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மகாலட்சுமி வீட்டு வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து வரும் மகாலட்சுமியிடம் ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாய்?
ஏன் ஆட்டோவில் வந்து இறங்குகிறாய் என சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு காய்கறி வெட்டும் கத்தியால் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியை குத்தி கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் 6 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.