
சேலம் மாவட்டத்திலுள்ள ஆணையம்பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன்(70). இவருக்கு பொன்னம்மாள்(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் வயது முதிர்ந்த தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதில் பொன்னம்மாளுக்கு நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் நீண்ட காலமாக இருந்துள்ளது. ஆனால் சமீப காலமாக மிக அதிகமாக நோய் வாய்பட்டு இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று பொன்னம்மாள் நோயால் மிகவும் அவதிப்படுவதாகவும், தன்னால் தாங்க முடியவில்லை எனவும், இதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தனது கணவர் சுந்தர்ராஜனிடம் தெரிவித்துள்ளார். கணவர் சுந்தர்ராஜனும் தானும் உடன் தற்கொலை செய்வதாக கூறியுள்ளார்.
இதனை அடுத்து இருவரும் விஷம் அருந்தி உள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம், பக்கத்தினர் வீட்டில் சென்று பார்த்த போது இருவரும் மயங்கிய நிலையில் கிடந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கும் சிகிச்சை பலனின்றி பொன்னம்மாள் இறந்துள்ளார். இதனை அடுத்து சுந்தர்ராஜனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயது முதிர்வு காரணமாக தம்பதியினர் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.