
சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் நாகலட்சுமி தெருவில் கேரளாவை சேர்ந்த விஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் இவரது நண்பர் கோகுலும் பெருங்குடியில் இருக்கும் தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் அஜேஷ் என்பவர் வேலையை விட்டுவிட்டு கன்னியாகுமரிக்கு செல்கிறார். நேற்று இரவு விஷ்ணு, கோகுல், கிஷோர் உள்ளிட்ட 8 பேர் அஜேஷின் அறையில் கெட் டுகெதர் பார்ட்டி நடத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை 4 மணிக்கு விஷ்ணுவும் கோகுலும் ஒரே மோட்டார் சைக்கிளில் மது வாங்குவதற்காக பல்லாவரம் துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள மதுபானுக்கு சென்று கொண்டிருந்தனர். அதன் பிறகு அவர்கள் மது வாங்கிவிட்டு வேளச்சேரி மெயின் சாலை வழியாக ராஜலட்சுமி நகருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் பள்ளிக்கரணை சிவன் கோவில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கோகுல் தலை மின்கம்பத்தில் மோதியது இதனால் தலை துண்டாகி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெஞ்சு பகுதியில் படுகாயம் ஏற்பட்டதால் விஷ்ணுவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.