
இந்தியா டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. இந்த நிலையில் வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்றங்களும் அதிகமாகி வருகின்றன. இதனை தடுக்க மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதில் சமீபத்தில் பெரும் அளவு மோசடிகளில் ஈடுபடும் “டிஜிட்டல் அரஸ்ட்” என்ற பெயரில் வீடியோ கால் வாயிலாக மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களை குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்ற விழிப்புணர்வை மக்களிடையே காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசும் சைபர் கிரைம் விழிப்புணர்வு வாசகங்களை செல்போன்களின் “காலர் டியூனாக” அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவின்படி அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் பயனாளர்களின் காலர் டியூனாக சைபர் கிரைம் வாசகங்களை அமைத்துள்ளன. இந்த விழிப்புணர்வு வாசகங்கள் வரும் 3 மாதங்களுக்கு 8 முதல் 10 முறை வாடிக்கையாளர்களுக்கு ஒலிபரப்பப்படும். இந்தக் காலர் டியூன்கள் முடிந்த பின்னரே அழைப்புகள் ஏற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.