சிரியாவில் கிளர்ச்சியாளர்களால் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி சிரியாவின் தலைநகரான டமாஸ்க்  கைப்பற்றப்பட்டது. இதனை அடுத்து 50 ஆண்டுகால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவடைந்தது. கடந்த 13 வருடங்களாக கிளர்ச்சியாளர்கள் மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்த்தப்பட்டு புதிய ஆட்சி அமைக்க உள்ளனர். டமாஸ்க் கைப்பற்றப்பட்ட அன்றே ஆஷாத்  சிரியா நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தனது குடும்பத்தோடு தஞ்சமடைந்தார்.

ஆஷாத் நாட்டை விட்டு வெளியேறிய பின் டமாஸ்க் கோட்டை முற்றிலும் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டு ஆட்சியில் முக்கிய பதவிகளில் உள்ளவர்களும் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் புதிய தலைமையை உருவாக்கும் முயற்சியில் கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தை இழந்து, சொந்த நாட்டை விட்டு நாடு கடத்தப்பட்டு ரஷ்யாவில் தஞ்சமடைந்த ஆசாத் இடமிருந்து அவரது மனைவி அஸ்மா அல்-ஆசாத் விவாகரத்து கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளன.

இதில் ரஷ்யாவில் தனது கணவர் ஆசாத்துடன் உள்ள அவரது மனைவி அஸ்மா அந்த புதிய வாழ்க்கை அதிருப்தி தருவதாகவும், அஸ்மா தான் பிறந்த மண்ணான லண்டனுக்கு திரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரிட்டிஷ்- சிரியா இரட்டை குடியுரிமை பெற்ற அஸ்மா ரஷ்ய நாட்டை விட்டு வெளியேற அனுமதி கோரி ரஷ்ய நீதிமன்றத்தில் விண்ணப்ப மனு அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகின்றன.