விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, எங்களுக்கு அரசியல் களத்தில் வேறு வாய்ப்புகள் இருந்த போதிலும் அதை நாங்கள் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். இது ஒரு துணிச்சலான முடிவு. திமுக அழுத்தம் கொடுக்கிறது அதனால் திருமாவளவன் பணிந்துவிட்டார் என்று கூறுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரையில் சனாதன சக்திகள் இந்த மண்ணில் வலுப்பெற கூடாது. அந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும்தான் நாங்கள் திமுக கூட்டணியில் நீடிக்கிறோம். எனவே இது பற்றி யாரும் பெரிதாக விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெருமைக்குரிய தமிழகத்தில் எப்படியாவது சனாதன சக்திகள் காலூன்ற முயற்சி செய்வதால் அவர்களை தடுப்பதற்காக விசிக முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

திராவிட சக்திகளை பலவீனப்படுத்தி சனாதன சக்திகள் நுழைந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக வெளியே வரவேண்டும். இல்லையெனில் அதிமுகவை பலவீனப்படுத்தி அந்த இடத்தில் பாஜக வந்து அமர்ந்து விடும். இதுதான் எங்களுடைய கவலை. திமுக என்ற அரசியல் கட்சியை விமர்சிப்பது வேறு. அதே சமயத்தில் திமுகவை விமர்சிக்கிறோம் என்று கூறி ஒட்டுமொத்த திராவிடத்தையும் விமர்சிப்பது ஆபத்து. திராவிட அரசியலை ஒட்டுமொத்தமாக பிழை என்று கூறுவது சனாதன சக்திகளை ஆதரிப்பது போன்றது என்பதால் அதனை கண்டிக்கிறோம். மேலும் சனாதன சக்திகளை எதிர்ப்பதற்காக இந்த கூட்டணியில் நீடிப்பதை பாராட்டாமல் விமர்சிக்கிறார்கள் என்றார்.