
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களது மகள் சுகன்யா(27) செங்கம் காவல் நிலையத்தில் பெண் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி சுகன்யாவுக்கு அண்ணாநகர் கிராமத்தைச் சேர்ந்த விஜய்(28) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த ஆறு மாதமாக கணவன் மனைவி இருவரும் செங்கம் டவுன் திருவள்ளூர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர். நேற்று முன்தினம் விஜய் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விஜய் இறந்ததை அறியாத அவரது பெற்றோரும், ஊர் பொதுமக்களும் சுகன்யா மீது சந்தேகப்பட்டனர். தற்போது சுகன்யா தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். விஜயின் பெற்றோரும் உறவினர்களும் மகனுக்கு நீதி கேட்டு காவல் நிலையத்தில் குவிந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அலட்சியமாக பதில் அளிப்பதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.