
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் பூதாகரமாக விடித்து உள்ள நிலையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பெண்கள் அனைவரும் காவல் உதவி செயலியை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும் என்று தற்போது கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, அரசு பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் பெண்கள் ஆபத்தான காலகட்டங்களில் உடனடியாக போலீஸ் உதவியை நாட காவல் உதவி செயலி இருக்கிறது. இந்த செயலியை பெண்கள் அனைவரும் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆபத்தான காலகட்டங்களில் அதில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால் பயனாளரின் விவரம், தற்போது உள்ள இருப்பிட விவரம், வீடியோ போன்றவைகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பெறப்பட்டு உடனடியாக உதவி கிடைக்கும். இந்த செயலியை மாணவிகள் தங்களுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்வதை அனைத்து கல்லூரிகளும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்த செயலியை google play store மற்றும் ஆப் ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.