தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதன் பிறகு பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி அவர் தன் கைப்பட ஒரு கடிதம் எழுதுகின்ற நிலையில் அந்த கடிதத்தை இன்று தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களாக விநியோகம் செய்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். அதோடு ஆளுநரை சந்தித்த பிறகு துண்டு பிரசுரம் விநியோகம் செய்வதை நேரில் பார்க்கச் சென்ற தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் போலீசார் கைது செய்தனர். தற்போது அனைவரையும் விடுதலை செய்தல் நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள x பதிவில்,
தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அதில், “எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது. கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா? இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.