
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்திவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் திமுக கட்சியை சேர்ந்தவர் என்று எதிர் காட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் சார் என்ற ஒருவருக்கும் வழக்கில் தொடர்பு இருப்பதாகவும் அதை அரசும் காவல்துறையும் மூடி மறைப்பதாகவும் கூறுகிறார்கள். இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இன்று பாமக கட்சியின் சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெறுகிறது.
நேற்று அன்புமணி ராமதாஸ் கள்ளக்குறிச்சியில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 7 நாட்களாகியும் அந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனவும் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் நாம் வாழ்வது நாடா இல்ல சுடுகாடா என்ற சந்தேகம் வருகிறது என்றும் ஆதங்கத்துடன் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது பாமக மகளிர் அணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முழுவதும் AM I NEXT.? அடுத்தது நானா.? என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அடுத்தது நாங்களா என்ற விதத்தில் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர். மேலும் இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.