
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் கோட்டார் நகரில் வசித்து வருபவர் சலீம். இவர் மஸ்கட் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நாகர்கோவிலில் உள்ள வீடு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளார். சிசிடிவி காட்சிகளை அவ்வபோது வெளிநாட்டில் வேலை செய்து வரும் சலீம் தனது செல்போனில் சோதனை செய்து கொள்வார். இந்த நிலையில் வீட்டில் ஆளில்லாததை அறிந்த கொள்ளையர்கள் நேற்று இரவு வீட்டின் முன் பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்துள்ளனர். அங்கு அவர்கள் பீரோவை உடைக்கும் காட்சி சிசிடிவி கேமரா மூலமாக சலீம் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போன் செய்து தனது வீட்டில் திருடர்கள் நுழைந்து இருப்பதாக கூறியுள்ளார். இதனால் பக்கத்து வீட்டுக்காரர் வெளியே வந்து திருடன் என கத்தி கூச்சலிட்டுள்ளார். இதைக் கேட்டு பதறிய திருடர்கள் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து எந்தெந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளது என சோதனை நடத்தி வருகின்றனர். ஆளில்லாத வீட்டில் திருடர்கள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.