
ஜம்மு காஷ்மீரில் டோடா பகுதியில் புத்தாண்டு தினத்தை ஒட்டி நண்பர்களுடன் வெளியே சென்ற எனது சகோதரர் படீர்வா தனது செல்போன் அழைப்புகளை ஏற்கவில்லை என ஒரு நபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அதே பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டலில் படீர்வாவின் மோட்டார் சைக்கிள் நிற்பதை கண்டறிந்து அந்த ஹோட்டலில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது படீர்வாவுடன் அவரது இரு நண்பர்களும் அந்த சொகுசு ஹோட்டலில் புத்தாண்டை கொண்டாட அறை ஒன்று எடுத்து தங்கி உள்ளனர் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை அழைக்க சென்று கதவை தட்டியுள்ளனர். ஆனால் யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே மூவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். உடனே தடவியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வந்த தடவியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் அந்த அறையில் சோதனை மேற்கொண்டனர். மூவரையும் பரிசோதித்த மருத்துவர் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மூவரின் உடல்களையும் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அந்த அறையில் உள்ள தடயங்களை சேகரித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, அந்த அறையில் கரியால் செயல்படும் ஹீட்டர் சாதனத்தினால் வெளிவந்த புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் பிரேத பரிசோதனையின் முடிவுகள் மற்றும் தடவியல் நிபுணர்களின் சோதனை முடிவில் தான் இறந்ததற்கான காரணம் கூற முடியும் என தெரிவித்துள்ளனர். புத்தாண்டை கொண்டாட சென்ற இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.