
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஹச்.டி(HD) உயர்ரக வரையறை கொண்ட செட்டாப் பாக்ஸ்கள் வழங்கி வருகிறது. இதுகுறித்து தமிழக கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாடு அரசு மிகவும் குறைந்த கட்டண வசதியான ரூபாய் 140 + ஜிஎஸ்டி என்ற முறையில் கேபிள் டிவி வசதிகளை செய்து வருகிறது.இந்த நிலையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் சந்தாதாரர்களின் கோரிக்கையின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உயர்ரக வரையறை கொண்ட செட்டாப் பாக்ஸ்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி 50 லட்சம் உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்கள் விநியோகிக்கப்படுகின்றன. முதல் கட்ட பணியாக 2 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு முதலில் ₹500 வை ப்புத் தொகை செலுத்தி செட்டாப் பாக்ஸ்களை பெற அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஹச்.டி செட்டாப் பாக்ஸ்களை பெற்று அனைத்து பொது மக்களுக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்துமாறு உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் சந்தாதாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களும் தங்களது அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பதிவுகளை ஹச்.டி செட்டாப் பாக்ஸ்கள் பெற்றுக்கொண்டு புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் புதுப்பிக்க தவறிய பகுதிகளில் உள்ள பழைய கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பதிலாக புதிய உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களாக பதிவு செய்ய விரும்புபவர்கள் www.tactv.in என்ற இணையப்பக்கத்தின் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். இல்லையெனில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்தும் பதிவு செய்து கொள்ளலாம் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.