மத்திய பிரதேச மாநிலத்தில் தீரேந்திர ஸ்ரீ வஸ்தவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு வீடு தேவாஸ் நகர் பகுதியில் இருக்கும் நிலையில் அதனை வாடகைக்கு விட்டிருந்தார். இந்த வீட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு சஞ்சய் படிதார் என்பவர் வாடகைக்கு வந்தார். இவர் ஒரு வருடம் கழித்து அந்த வீட்டை காலி செய்த நிலையில் அந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் மட்டும் அவருக்கு சொந்தமான சில பொருட்கள் இருந்துள்ளது. அந்த பொருட்களை எடுக்குமாறு சஞ்சயிடம் உரிமையாளர் கூறிய போதிலும் அவர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் அந்த அறையை மட்டும் பூட்டி வைத்துவிட்டு அவர் வேறொருவருக்கு வீட்டை வாடகைக்கு விட்ட நிலையில் சமீபத்தில் அந்த அறையை ‌ ஸ்ரீ வஸ்தவா திறந்துள்ளார்.

அப்போது அந்த அறையின் மின் இணைப்பை துண்டித்தார். பின்னர் அந்த அறையில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் அவர் சந்தேகப்பட்டு அறையைத் திறந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அவர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார். இது தொடர்பாக அவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் அந்த பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்த நிலையில் சஞ்சையை பிடித்து விசாரணை நடத்தி‌ வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.