
சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி மாட்டு கோமியம் குடித்தால் 15 நிமிடங்களில் காய்ச்சல் சரியாகும் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது விவாத பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக தற்போது தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மாட்டு கோமியத்தில் ஆயுர்வேதம், ஆராய்ச்சி பூர்வமாக மைரோ ஆர்கனிசத்தை காப்பாற்றும் சக்தி இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர். நம்முடைய தமிழ் இலக்கியங்களில் மாட்டு சாணம் பூசப்பட்ட முற்றங்கள் சொல்லப்பட்டுள்ளது அல்லவா.? 80 வகையான காய்ச்சலுக்கு கோமியம் என்பது அருமருந்தாக இருக்கிறது. கோமியம் என்பது மதுவை விட மோசமானது கிடையாது. கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள்.
மாட்டுச் சாணத்தை பயன்படுத்துவார்கள். மாட்டுக்கறி சாப்பிடுவார்கள் ஆனால் மாட்டு கோமியம் மட்டும் குடிக்க மாட்டார்களா. நான் ஒரு அலோபதி மருத்துவராக இருந்தாலும் சொல்கிறேன் மாட்டு கோமியம் நல்லது என்று. அலோபதி மருத்துவரான நான் மாட்டு கோமியம் குடித்தால் நல்லது என்று சொல்கிறேன் என்றால் அது விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஐடி இயக்குனர் எப்படி ராஜினாமா செய்யுங்கள் என்று சொல்ல முடியும். அவர் மாட்டு கோமியம் பற்றி தன்னுடைய அனுபவத்தை தான் கூறியுள்ளார் என்றார். இதற்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை.
ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?
மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம்.
இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா?
வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்.