
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த சீமான் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இனத் துரோகி மற்றும் தேசத் துரோகி என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசி இருந்ததாக காங்கிரஸ் தலைவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. வழக்கை தொடர்ந்து நடத்துவதில் தவறில்லை. வழக்கிலிருந்து விடுவிக்க கோரும் சீமான் கோரிக்கையில் போதுமான ஆதாரங்கள் இல்லை. நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை எதிர் கொண்டால்தான் இது போன்று பேசுவதை சீமான் நிறுத்துவார். கடந்த ஆறு மாதங்களாகவே சீமானின் பேச்சு தலைவர்களை தாக்குவதாகவே இருக்கின்றது. சீமான் தனிப்பட்ட நபர்களை தூண்டும் வகையில் கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். இது போன்ற கருத்துக்களை பேசக்கூடாது என்று அவருக்கு அறிவுரை வழங்கும் படி சீமான் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிமன்றம் சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.