தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது பற்றி அவர் கூறியதாவது, தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து நடந்து கொண்டிருக்கிறது நமக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. காவல்துறையினரும் ஆட்சியாளர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.

அரசு பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று கூறிய போதிலும் குற்றங்கள் என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்வதோடு கொடூரமான பாலியல் வன்கொடுமை குற்றங்களை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இது போன்ற குற்றங்கள் அதிகரிக்க போதை பொருள் தான் காரணம். மேலும் தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் என்பது அதிகரித்து விட்டதால்தான் பாலியல் குற்றங்களும் அதிகரித்து விட்டது என்று கூறினார்.