
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியில் திமுக கட்சியின் சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். இந்த கண்டன கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் கூறியதாவது, தமிழகத்தை மட்டும் மத்திய அரசு புறக்கணிக்கிறது. மிகவும் வேதனையுடன் இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம். கண்டன கூட்டம் நடத்துகிறோம் என கூறுவதை விட கண்டன கூட்டத்தை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதே சரியானது. மத்திய பட்ஜெட் தாக்கலில் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே ஒன்றுமில்லை. மத்திய பட்ஜெட்டில் மக்களுக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பையும் ஏமாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கல்விக்கு மொத்தமே 2.3% நிதிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பட்ஜெட் என கூறிவிட்டு பீகாருக்கு மட்டுமே திட்டங்கள் ஒதுக்கி உள்ளனர். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு திட்டங்கள் குவிந்தன. தற்போது பிகாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு என எந்த ஒரு புதிய திட்டங்களும் இல்லை. தமிழகத்திற்கு எதை கேட்டாலும் இல்லை, இல்லை என்றால் இதற்குப் பெயர் பட்ஜெட் தாக்கலா?. மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டாம் எனக் கூறவில்லை. எங்களுக்கும் ஒதுக்குங்கள் என்றே சொல்கிறோம். இந்தியாவின் முதுகெலும்பு தமிழ்நாடு.
அதற்கு நிதி ஒதுக்காமல் இருக்கலாம் ஆனால் நாங்கள் நிதியை அடையாமல் இருக்க மாட்டோம். மத்திய அரசு அதிக ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் தமிழ்நாடு மேலும் எல்லாத் துறைகளிலும் நன்கு வளர்ச்சி அடைந்திருக்கும். தமிழ்நாட்டின் உரிமையை காக்க ஒன்று கூடியுள்ளோம். தமிழ்நாடு முழுக்க திமுக கொடி கம்பீரமாக பறந்து கொண்டிருக்கிறது. மக்களின் பேராதரவால் உருவானது தான் திமுக. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளோம். பெரியார் மண்ணில் மாபெரும் வெற்றியை கண்டுள்ளோம். ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். இவ்வாறு அவர் கண்டன கூட்டத்தில் பேசினார்.