கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி நகரின் அருகே அமித் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஆஷா (30) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் அமித் டிவி பழுது பார்க்கும் வேலை செய்து வரும் நிலையில்  இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் சரிவர வேலைக்கு செல்லாமல் தினசரி சரக்கடித்து விட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். கடந்த ஒரு வாரமாக அவருடைய கணவரின் தொல்லை அதிகரித்த நிலையில் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி அமித் வழக்கம் போல் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார்.

அப்போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தி தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆஷா அவருடைய கணவரை குத்தி கொலை செய்தார். பின்னர் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தன்னுடைய குழந்தைகளுடன் தப்பி ஓடிவிட்டார். ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே எட்டிப் பார்த்தபோதுதான் அமித் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆஷாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.