தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசுகிறது என்று செந்தில் பாலாஜி கூறும் நிலையில் தமிழக மக்கள் மத்தியில் கவலை அலை தான் வீசிக் கொண்டிருக்கிறது. அதிமுக பிரச்சனை தற்போது தேர்தல் கமிஷனுக்கு சென்றுள்ள நிலையில் இதற்கு காரணம் பாஜக தான் என்று செல்வ பெருந்தகை கூறுகிறார். யார் வீட்டிலாவது சமையல் நடைபெறவில்லை என்றாலும் அதற்கும் பாஜகவின் சதிதான் காரணம் என்று அவர் கூறுவார்.

தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் வாக்கு சதவீதம் 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது 5 டிகிரி வரை தான் காய்ச்சல் அதிகரித்துள்ளது. எனவே அதற்கு தக்க மருந்து வழங்கப்படும். அதன் மூலம் அந்த காய்ச்சல் குறைய தொடங்கும். திமுக கூட்டணியில் இருப்பவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இருக்கிறது. வேங்கை வயல் விவகாரத்தில் திமுக அரசின் மீது திருமாவளவனுக்கு நம்பிக்கை இல்லை. அவர் உள்ளூர் காவல்துறையை நம்பாமல் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறுகிறார். கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியோரும் ஆட்சிக்கு எதிராக பேசுகிறார்கள். மேலும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் இந்தியா கூட்டணியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது என்பது தெளிவாக தெரிகிறது என்றார்.