
கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் இந்து அமைப்புகள் சார்பில் கடந்த 1998-ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு நேற்று மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விஜய் பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை வைத்திருந்தாலும் எந்த பாகுபாடும் இன்றி பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவராக யார் வரவேண்டும்? என்பதை எங்களது கட்சி தலைவர்கள் தீர்மானிப்பார்கள். நான் இந்த கட்சியின் தொண்டனாக எப்போதும் இருப்பேன். தலைவர்கள் மாறித்தான் ஆக வேண்டும். கட்சி வளர வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. பாஜக மாநில தலைவர் பதவி குறித்து காலம், நேரம் வரும்போது பதில் சொல்வோம். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை. கோவை குண்டு வெடிப்பிற்கு காரணமான பாட்ஷாவை ஒருவர்(சீமான்) அப்பா என்கிறார். குண்டுவெடிப்பில் இறந்த 58 பேருக்கு அப்பா இல்லையா? ஓட்டு பிச்சை எடுக்க களத்திற்கு வந்த அரசியல்வாதியை புறம் தள்ள வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.