ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் மீண்டும் அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவர் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது சமீபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை புறக்கணித்தார்.

இப்படியான நிலையில் ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னை பாராட்டும் ஆடியோவை செங்கோட்டையன் மைக்கில் ஒளிபரப்பினார். அந்த ஆடியோவில், எதைக் கொடுத்தாலும் வெற்றிகரமாக முடிக்க கூடியவர் செங்கோட்டையன். அதனால் தான் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை அளித்தேன். எனக்காகவும் என்னுடைய இயக்கத்திற்காகவும் இமயமே தன் தலையில் விழுந்தாலும் சறுக்காமலும் வழுக்காமலும் தன்னுடைய உழைப்பை கொடுக்கக் கூடியவர் செங்கோட்டையன்.

துளி சறுக்கலுக்கோ வழுக்கலுக்கோ இடம் கொடுக்காத கொள்கை உறுதியும் கொண்ட தலைமை மீது விசுவாசமும் கொண்ட தலைவராக இருந்ததால்தான் இன்று இத்தனை சிறப்புகளை பெற்று அன்பு சகோதரர் செங்கோட்டையன் விளங்குகின்றார் என ஜெயலலிதா பேசுகின்றார். செங்கோட்டையன் திடீரென்று மேடையில் ஜெயலலிதா அவரை புகழ்ந்து பேசும் ஆடியோவை ஒளிபரப்பியது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.