
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி வனப்பகுதியில் இரண்டு உடல்கள் கிடந்தது. இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசாரும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது வாயில் நுரை தள்ளியபடி ஒரு பெண்ணும் ஆணும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உயிரிழந்த ஆணின் சட்டை பாக்கெட்டில் 9,580 ரூபாய் பணம் இருந்தது. அருகிலேயே ஒரு பூச்சிக்கொல்லி பாட்டிலும் இருந்தது. எனவே இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதனையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.