மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ.2152 கோடி நிதி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த நிதியை இதுவரை மத்திய அரசு விடுவிக்கவில்லை. அதாவது தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காததால் நிதியை விடுவிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்  மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையை ஏற்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏற்க முடியாதா என்று கேள்வி எழுப்பினார். அதன்பிறகு தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதாவது மத்திய அரசு தமிழ்நாட்டை பிளாக்மெயில் செய்வதாக கூறிய அவர் இந்திய அரசியலமைப்பில் எந்த சட்டத்தின் கீழ் மும்மொழிக் கொள்கை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய மந்திரியால் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதோடு நாங்கள் எங்கள் உரிமைகளை தான் கேட்கிறோம் என்றும் நீங்கள் இப்படி தொடர்ந்து திமிரை காட்டினால் தமிழர்கள் யார் என்று டெல்லிக்கு காட்ட வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, தமிழக அரசை பிளாக் மெயில் செய்யவில்லை.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அரசு பள்ளிகளில் மட்டும் ஏன் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதில்லை. தாய்மொழியான தமிழ் மொழியை தான் பிரதான மொழியாக கற்பிப்போம் என்று கூறுகிறோம். அதற்கு உங்களுடைய பதில் என்ன என்று முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முன்னதாக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் நடத்தும் பள்ளிகளில் அவர்களுடைய பிள்ளைகள் பேரன் பேத்திகள் ஆகியோர் மட்டும் மும்மொழி கொள்கையை படிக்கும் நிலையில் அரசு பள்ளிகளில் படிக்கும் எங்க வீட்டு குழந்தைகள் மட்டும் ஹிந்தியை படிக்கக்கூடாதா என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.