
தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை நிதி தர முடியாது என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதே சமயத்தில் பாஜக தலைவர்கள் தனியார் பள்ளிகளில் மட்டும் ஹிந்தி கற்பிக்கப்படும்போது அரசுபள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மட்டும் ஹிந்தி கற்க கூடாதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இன்று திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் இது பற்றி பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்கும் போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் மட்டும் மும்மொழிக் கொள்கையை பின்பற்றக் கூடாதா.? இதற்கு பதில் சொல்லுங்கள் முதல்வரே என்றார்.
அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எப்போதும் இரு மொழிக் கொள்கையை மட்டும் தான் ஏற்போம் என்று கூறியுள்ள நிலையில் அவருக்கும் சில கேள்விகளை எழுப்பினார் தமிழிசை. அதாவது நடிகர் விஜயின் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இது மும்மொழிக் கொள்கை. உங்கள் வியாபாரத்துக்கு பல மொழிக் கொள்கை இருக்கும் நிலையில் குழந்தைகளின் அறிவாற்றலுக்கு இருக்கக் கூடாதா.? தன்னுடைய படங்களை மூன்று மொழிகளில் வெளியிடும் விஜய் மும்மொழி கொள்கையை எதிர்க்கலாமா என்று கேள்வி எழுப்பினார்.