சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்யுமாறு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி சேலம் முழுவதும் கடந்த 3 நாட்களாக காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் சேலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஓமலூர் வந்து கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வீரா, கிருபாகரன், ரவி பிரசாத், ஜெயவேல், புவனச்சந்திரன் ஆகியோரை வெவ்வேறு இடங்களில் இருந்து கைது செய்தனர்.

இவர்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததோடு யார் யார் எங்கே விற்பனை செய்கிறார்கள் என்ற தகவல்களையும் பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் காவல்துறையினர் கஞ்சா விற்பனை குறித்து கண்காணித்து வருகின்றனர்.