
கரூர் மாவட்டம் ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ராஜேஷ் கண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி குளோரா செல்சியா. இவர்களுக்கு 13 வயதில் மகள் இருக்கிறார். இவர் ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வழக்கம் போல் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென பள்ளியின் 2-வது மாடியில் இருந்து விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து சிறுமியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவிக்கு இடுப்புக்கு கீழ் பகுதி செயல்படவில்லை என்று கூறினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலைக்கு முயன்றாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.