இந்தியா சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடித்து வருவதால், எல்லைகளை துல்லியமாக வரையறை செய்ய முடியவில்லை. அதற்கு பதிலாக எல்ஏசி என்று கூறப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு, அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவ்வபோது இந்திய பகுதிகளுக்கு சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாக சீனா உள்ளது. இது தொடர்பாக ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார்.

ஆனால் பிரதமரின் கூற்றை ஏற்றுக் கொள்ளாத ராணுவம் 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பை சீனா ஆக்கிரமித்து உள்ளதாக தெரிவித்துள்ளது என்று கூறினார். அண்மையில் காங்கிரசின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இணைந்து சீனாவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியும் என்று
நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் சீனாவிடம் இருந்து நமக்கு என்ன அச்சுறுத்தல் வருகிறது என்று எனக்குப் புரியவில்லை. நமது அணுகு முறை முதலில் இருந்து மோதலாக உள்ளது. அதுதான் எதிரிகளை உருவாக்குகிறது. ஆனால் இது நாட்டிற்குள் ஆதரவை பெற்றுள்ளது.

இந்த மனநிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் துஹின் சின்ஹா கூறியதாவது, அவர்கள் 40,000 சதுர கி.மீ நிலத்தை சீனாவுக்கு விட்டுக் கொடுத்தவர்கள். இன்னும் சீனாவின் அச்சுறுத்தலை அவர்கள் பார்க்கவில்லை. சீனா மற்றும் பாகிஸ்தானின் நலன்களை, நமது நாட்டின் நலனுக்கு மேலாக அவர்கள் நினைக்கிறார்கள். ராகுல் காந்தியின் ரிமோட் கண்ட்ரோல் ஜார்ஜ் சோரஸ் மற்றும் சீனாவின் கைகளில் உள்ளது என்று தெரிவித்தார்.