மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறும் நிலையில் முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கிறார். இந்நிலையில் மேற்குவங்க மாநில சட்டசபை கூட்டத்தொடரின் போது முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக எம்எல்ஏகளை விமர்சித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, பாஜக எம்எல்ஏக்களுக்கு தைரியம் கிடையாது. அவர்கள் என்னை எதிர்கொள்ள பயப்படுவதால் நான் பேசும் போதெல்லாம் சபையை புறக்கணிக்கிறார்கள். நான் முஸ்லிம் லீக் அமைப்பில் இருப்பதாக ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் சொல்வதற்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

நான் ஒற்றுமையான வாழ்வு மற்றும் மத சார்பின்மை போன்றவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளேன். பக்கத்து நாட்டில் பதட்டமான சூழல் நிலவிய போதிலும் மேற்கு வங்கத்தில் அமைதியை நிலைநாட்டியது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான். எனக்கு வங்காளதேசத்தை சேர்ந்த பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தால் அதனை பாஜகவினர் முதலில் ஆதாரங்களுடன் நிரூபிக்கட்டும். ஒருவேளை அவர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தால் என்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். மேலும் பேச்சு சுதந்திரம் என்பது வெறுப்பு பேச்சை மக்கள் மத்தியில் பரப்பி பிரிவுணர்வை ஏற்படுத்துவது கிடையாது என்று கூறினார்.