
சென்னை மாவட்டம் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அன்சாரி(40). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அன்சாரி தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்(50) என்பவர் எனது மகனுக்கு உனது அக்கா மகளை திருமணம் செய்து வைக்க முடியுமா என அன்சாரியிடம் கேட்டுள்ளார். அப்போது போதையில் இருந்த அன்சாரி அதெல்லாம் முடியாது என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த ராஜ் அன்சாரியை பிடித்து கீழே தள்ளியதால் அங்கிருந்த மோட்டார்சைக்கிள் மீது தடுமாறி விழுந்த அன்சாரிக்கு மூக்கு, கண் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அன்சாரியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அன்சாரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜை கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.