அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள மரானா பிராந்திய விமான நிலையத்திற்கு அருகில் இரண்டு சிறிய விமானங்கள் காற்றில் நேருக்கு நேர் மோதியதில்,  இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் டுசான் நகரின் அருகே, அவ்ரா வேலி பகுதியில் புதன்கிழமையன்று நடைபெற்றதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மோதிய விமானங்கள் Cessna 172S மற்றும் Lancair 360 MK II என அடையாளம் காணப்பட்டுள்ளன. இரண்டும் ஒரே இன்ஜின் கொண்ட விமானங்கள் என்பதோடு, ஒவ்வொன்றிலும் இரண்டு பயணிகள் இருந்தனர். மோதலுக்கு பிறகு, மரானா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு (NTSB) இந்த விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு, காரணங்களை கண்டறிய முயன்று வருகிறது. இது அமெரிக்காவில் கடந்த சில வாரங்களில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பல்வேறு விமான விபத்துகளில் ஒன்றாகும், இது விமானப் பயண பாதுகாப்பு மீதான கவலையை அதிகரித்துள்ளது. ஜனவரி மாத இறுதியில், வாஷிங்டன், டி.சி.-யில், அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானம் மற்றும் இராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதியது. இது 9/11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தாக கருதப்படுகிறது. கூடுதலாக, டெல்டா விமானம் டொரோண்டோவில் தரையிறங்கும்போது புரண்டது, அலாஸ்காவில் ஒரு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது, மற்றும் பென்சில்வேனியாவில் மருத்துவக் குழுவைச் சென்றுகொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகி, ஆறு பேரும் உயிரிழந்தனர்.

அண்மையில் நடந்த முக்கியமான விமான விபத்துகளில், மோட்லி க்ரூ பாடகர் வின்ஸ் நீல் பயணித்த தனியார் ஜெட் அரிசோனாவில் ஓடுபாதையிலிருந்து வெளியேறி விபத்துக்குள்ளானது, இதில் ஒரு விமானி உயிரிழந்தார். மேலும், பென்சில்வேனியாவில் விபத்துக்குள்ளான மருத்துவ விமானம் பயணிக்கும்போது, அது விபத்தில் சிக்கி தீப்பிடித்து ஏரிந்ததில் 7 பேர் இறந்ததோடு   19 பேர் காயமடைந்தனர். இந்த தொடர்ச்சியான சம்பவங்களால் விமானப் பாதுகாப்பு மீதான கவலைகள் அதிகரித்துள்ளது.