பெரம்பூர் மாவட்டம் தம்புரான் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (73). இவர் கடந்த 8-ம் தேதி புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் பணம் எடுத்து தருமாறு ராமச்சந்திரன் உதவி கேட்டுள்ளார். அந்த நபர் ராமச்சந்திரனின் ஏ.டி.எம் கார்டை வாங்கி 2 ஆயிரம் ரூபாய் எடுத்து கொடுத்தார். சிறிது நேரத்தில் முதியவரின் வங்கி கணக்கிலிருந்து 48 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் தனது கையில் இருந்த ஏ.டி.எம் கார்டை பார்த்தார். அப்போது தான் அது தனது கார்டு இல்லை. பணம் எடுத்து தந்து உதவிய நபர் ஏ.டி.ஏம் கார்டை மாற்றி கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து ராமச்சந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் பணம் மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.