திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சக்திவேல். இவரது மனைவி கடந்த 2001 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அந்தப் பெண் அவரது கணவர் சக்திவேல் கண்முன்னே காவல்துறையினரால் ஆடைகளைக் களைந்து மானபங்கம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து அந்தப் பெண் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற போது ஊர் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டார். அதிலிருந்து சில நாட்கள் கழித்து பெண்ணின் கணவர் சக்திவேல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து  கோட்டாட்சியர் நடத்திய விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 24 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் இன்று திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பில் குற்றவாளிகளாக கருதப்பட்ட காவல் ஆய்வாளர் ரங்கசாமி (77), காவலர்கள் வீரத்தேவர் (68), சின்ன தேவர் (69) ஆகிய மூவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 36,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.