
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது அழகநேரியை சேர்ந்த இசக்கி என்பவரது மனைவி வள்ளி தனது மகள் ரம்யாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார். இந்த நிலையில் வள்ளி தனது சேலைக்குள் மறைத்து எடுத்துச் சென்ற மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் வள்ளியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர் கூறியதாவது, நானும் எனது கணவரும் மீன் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். உறவினர்கள் சிலர் எங்களுக்கு சொந்தமான வீட்டை அபகரித்து விட்டனர். இதுகுறித்து தலையாரி மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாழ்க்கையை வெறுத்து தீக்குளிக்க முயன்றேன் என கூறினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.