ஒடிசா மாநிலத்தில் உள்ள இளம் பெண் ஒருவர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்தப் பெண் ஏற்கனவே கடந்த 2021ல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் அந்தப் பெண் கடந்த 9 ஆண்டுகளாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி சப்-இன்ஸ்பெக்டர் பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார் அளித்துள்ளார்.

மேலும் கர்ப்பத்தை தடுக்க கருத்தடை மருந்துகள் வாங்கிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு ஒடிசா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த உறவு திருமணமாக முடியவில்லை. ஒரு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பாகும். காதல் தோல்வி சட்டப்படி குற்றமாகாது. தனிப்பட்ட ஏமாற்றம் என்பது சட்டப்படி மோசடி கிடையாது. இருவரும் சம்மதத்துடன் ஒரு உறவில் இருப்பது பாலியல் வன்கொடுமை அல்ல எனக் கூறி வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும் நீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டதாவது, நமது நாட்டின் சட்ட அமைப்பு சமூக உணர்வு மற்றும் உடலுறவு, திருமண பந்தங்களை பிரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் பாலியல் தேர்வு ஒரு ஆண் தரும் திருமண உறுதிப்பாட்டில் மட்டுமே உள்ளது என்ற கருத்தை இது உருவாக்குகிறது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.