மதுரை மாவட்டம் மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கருப்பசாமி- பாண்டிச்செல்வி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமி மதுரை மாநகராட்சியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கருப்பசாமிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் கருப்புசாமிக்கும் பாண்டி செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது கோபமடைந்த கருப்பசாமி தனது மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதற்கிடையே செல்வியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் செல்வி துடித்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்திலேயே செல்வி உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  செல்வியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கருப்புசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.