
விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பிரபாகரன். இவரது மகள் ரித்திகா. இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தேர்வு தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன் ரித்திகாவின் தந்தை உயிரிழந்துள்ளார். இதேபோல் அதே பள்ளியில் படிக்கும் முகையூரை சேர்ந்த மகிமை என்ற பெண்ணின் தாயார் அமல மேரி, செல்லியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவி நூர்ஜகானின் தந்தை ஜான்பாஷா ஆகியோர் கடந்த 5 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர்.
அம்மா,அப்பா உயிரிழந்த நிலையில் கூட 3 மாணவிகளும் நேற்று தொடங்கிய அரசு பொதுத் தேர்வை எழுதி உள்ளனர். இதேபோன்று சிவகங்கை மாவட்டத்தில் ராம்நகரில் வசித்து வரும் 12-ம் வகுப்பு மாணவன் செந்தில்வேலன். இவர் மன்னர் மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் கணிதம் பிரிவில் படித்து வருகிறார். இவரது தந்தை நேற்று அதிகாலை உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். 12ஆம் வகுப்பின் முதல் தேர்வு தொடங்கிய அன்றே தந்தை உயிரிழந்தாலும், அன்றைய தேர்வு எழுதிவிட்டு வந்து தனது தந்தைக்காண இறுதிச் சடங்கை செந்தில்வேலன் செய்து முடித்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகமடைய செய்துள்ளது.