
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே குருப்பம்பட்டி பகுதியில் சித்திரை வேல் (55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்திய ரூபிணி என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த நிலையில் ஜெயசீலன் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதால் பேசி பழகி வந்துள்ளனர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோரும் இவர்கள் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனிடையே ஜெயசீலன் கட்டிட வேலை செய்து வரும் நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக திருப்பூருக்கு கட்டிட வேலைக்காக சென்றிருந்தார்.
அப்போது ஜெயசீலன் திடீரென கட்டிடத்தில் இருந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய அவரை சடலமாக பார்த்தது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த துயரிலிருந்து நித்திய ரூபிணி மீளாமல் இருந்தார். அவர் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்த நிலையில் திடீரென அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.