சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அசத்தியிருந்தார். இதற்கிடையில் இந்தியா முழுவதுமாக உள்ள முஸ்லிம்கள் ரமலான் மாதத்தை முன்னிட்டு விரதம் இருக்க தொடங்கி உள்ளார்கள். இந்த நிலையில் சாம்பியன் டிராபி தொடர் பயணத்தின் போது முகமது ஷபி ரமலான் நோன்பு கடைபிடிக்காதது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசிய தலைவர் கூறுகையில், “ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாயம்.

ஆனால் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி போட்டியின் போது குளிர்பானம் குடித்தார். மக்கள் அவரை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். ஆனால் அவர் விரதத்தை கடைபிடிக்காமல் பாவம் செய்துவிட்டார். ஷரியத்தின் பார்வையில் அவர் ஒரு பாவி கடவுளுக்கு எதிராக அவர் பதில் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் .

இதனை அடுத்து முஹம்மது ஷபி மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாக உறுப்பினர், “ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டு இருந்தாலோ  விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுடைய விருப்பம் உள்ளது என்று குர்ரானில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே ஷமி விரதம் இருக்காமல் இருக்க விருப்பம் உள்ளது. அவர் மீது யாரும் குற்றம் சாட்ட முடியாது” என்று கூறியுள்ளார்.