தூத்துக்குடி மாவட்டத்தில் மேல நம்பிபுரத்தில் பூவன்-சீதாலட்சுமி(70) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பூவன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் இவருடைய மனைவி சீதாலட்சுமி தனது மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் தனியாக இருந்ததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து 2 பேரையும் கொலை செய்து விட்டு அவர்களிடம் இருந்த 13 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இரட்டை கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக 9 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  காவல்துறையினரின் விசாரணையில் அந்த மர்ம நபர்கள் மேலநம்பிபுரத்தை சேர்ந்த முனீஸ்வரன், மகேஷ் கண்ணன் மற்றும் தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது. அதோடு அவர்கள் கஞ்சா போதையில் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த 3 பேரையும் கைது செய்வதற்காக காவல்துறையினர் தீவிர தேடுதலில் இறங்கினர். அப்போது வேல்முருகன் மற்றும் மகேஷ் கண்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளி யாக கருதப்படும் முனீஸ்வரன் என்பவரை தேடி வந்த நிலையில் அவர் அயன் வடமலாபுரம் காட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்று அவரை தேடிய நிலையில்  கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின் அவர் தன்னுடைய உறவினரின் வீட்டிற்கு சென்றிருப்பதாக தகவல் வந்த நிலையில் அங்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் பின்னால் தப்பி ஓட முயன்ற முனீஸ்வரனை கைது செய்து காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை காட்டுப் பகுதியில் மறைத்து  வைத்திருப்பதாக அவர் கூறினார். அதன் பின் அந்த நகைகளை எடுப்பதற்காக அவரை அழைத்துக்கொண்டு போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது முனீஸ்வரன் நகைகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் உடன் நின்று கொண்டிருந்த ஜாய்சன் நவதாஸ் ஆகியோரை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார்.

உடனடியாக முத்துராஜா அவரிடம் இருந்த துப்பாக்கியால் முனீஸ்வரனின் வலது காலில் சுட்டார். இதனால் காயமடைந்த முனீஸ்வரன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.