தமிழகத்தில் தங்கம் இருப்பதாக இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு  இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் 175வது ஆண்டு விழாவின் போது புவியியல் ஆய்வு நிறுவனத்தின் தென் மண்டல இயக்குனர் எஸ்.பி. விஜயகுமார் நிகழ்ச்சியில், திருவண்ணாமலை, ராஜபாளையம் பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதேபோல மின்கலங்கள் தயாரிக்கப்படும் லித்தியம் என்ற கனிமம் தமிழக நிலப்பரப்பில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என அவர் கூறியது தமிழகத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, திருவண்ணாமலை மாவட்ட த்தில் கடந்த 2022- 2023ஆம் ஆண்டு இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. இதில் ஆய்வை மேற்கொண்ட நிலவியலாளர்களான ஆர். ராம் பிரசாத், சுபா ராய் ஆகியோர் ஆய்வின் முடிவுகளை 2024 பிப்ரவரியில் வெளியிட்டனர். இந்த ஆய்வு முடிவுகளில் தான் தமிழகத்தில் தங்கம் இருப்பது தெரியவந்தது.

மேலும் அப்பகுதிகளில் தங்கம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் தான். ஆனால் அதற்கு கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். ஒரு இடத்தில் தங்கம் இருப்பது கண்டறிவது மட்டும் போதாது அதனை வெட்டி எடுப்பதற்கேற்ற தொழில்நுட்ப வசதிகள், பொருளாதார முதலீடுகள் மற்றும் சூழல் அனுமதிகள் ஆகியவை பொறுத்து தங்கத்தை பெறுவதற்கு முடியும்.

எனவே ஓர் இடத்தில் தங்கம் இருக்கிறதா என்பதை விட அதை எடுப்பது பொருளாதார ரீதியாக முடியுமா என்பதை ஆராய்ந்து மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் அனுமதி பெற்று சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு, புவியியல் ஆய்வு மதிப்பீடு அடிப்படையில் மட்டுமே தங்கம் தோண்டுவதற்கான அனுமதிகள் பெறப்படும். திருவண்ணாமலை பகுதிகளில் தங்கம் இருப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.