
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் கீவளூர் என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சகா என்பவர் அந்த சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இவர் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கும் பட்சத்தில் அந்த சிறுமி இவரின் காதலை மறுத்ததால் அவர் அந்த சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொள்வதற்கு முயற்சி செய்து வந்திருக்கிறார்.
அப்போது திடீரென அவருக்கும், அந்த சிறுமியின் பெற்றோருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சகா அந்த சிறுமியின் தந்தையை கத்தியால் குத்த முயன்றார். அதன்பின் அவரது தாயை கீழே தள்ளிவிட்டு காலால் எட்டி உதைத்தார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அந்த வாலிபரின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சரித்திர பதிவேடு குற்றவாளியான சகாவை கைது செய்து அவரிடம் இருந்த அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை கைப்பற்றினர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.