
சிரியாவில் பாஷர் அல் அசாத் ஐ அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல வருடங்களாக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள் பல பகுதிகளை ஆக்கிரமித்தனர். இதைத்தொடர்ந்து ஆசாத் அதிபர் பதவியில் இருந்து விலகியதோடு நாட்டை விட்டு வெளியேறினார். இதன் மூலம் ஆசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தற்போது ஆசாத் ஆதரவாளர்களுக்கும், சிரியா நாட்டின் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது குறித்து பிரிட்டனில் செயல்படும் “சீரியல் ஆப் சர்வேட்டரி பார் ஹுமன் ரைட்ஸ்”என்ற அமைப்பின் தகவலின் படி இந்த கலவரத்தில் 750 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 125 அரசு பாதுகாப்பு வீரர்கள், மற்றும் 150 க்கும் மேற்பட்ட அசாத் ஆதரவாளர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து லடாக் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர்.
இதன் பின் அசாத் ஆதரவாளர்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில் அரசுக்கு ஆதரவாக இருக்கும் சன்னி முஸ்லீம் ஆயுதப்படையினரால் அசாத்தின் அலாவைட் பிரிவினருக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது ஆயுதப்படையினர் அலாவைட் ஆண்களை தெருக்களிலும், வீடுகளின் வாசல்களிலும் வைத்து சுட்டுக்கொன்றதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். மேலும் அவர்களது வீடுகள் கொள்ளை அடிக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
இவ்வாறு நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து வெளிப்படை தன்மையுடன் நியாயமான விசாரணைகள் நடத்தப்படுவதை சிரியா இடைக்கால அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரான்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் பெண்களின் உரிமையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கத்தோடு சர்வதேச மகளிர் தினத்தை நேற்று கொண்டாடினோம், ஆனால் அதே தினத்தில் சிரியாவில் பெண்கள் ,சிறுமிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டுள்ளனர் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாக உள்ளது என்று கூறினர்.