நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி காந்தல் பகுதியில் 30 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் ஊட்டி ரயில் நிலையம் பகுதியில் இருக்கும் தங்கும் விடுதியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆறாம் தேதி அந்த பெண் வேலை முடிந்து ஊட்டி காந்தல் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்றார். அப்போது எதிரில் வந்து நின்ற வாலிபர் அந்த பெண் அணிந்திருந்த கவரிங் நகையை தங்கம் என நினைத்து பறித்து ஓடினார்.

உடனே அந்த பெண் அலறி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வாலிபரை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணை அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபின் சாகுல் என்பது தெரியவந்தது. முதல் முறையாக அபின் ஷாகுல் திருட்டு செயலில் ஈடுபட்டுள்ளார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.