
கன்னியாகுமரி மாவட்டம் வடலிவிளை பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலு அந்த பகுதியில் கொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேலுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது தட்டான்விளை பகுதியைச் சேர்ந்த சுதன் என்பவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து வேலுவை கொலை செய்துள்ளார்.
மதுபோதையில் நடந்து வந்த சுதனும் அவரது நண்பர்களும் வேலுவை வழிமறித்து பணம் கேட்டனர். அப்போது வேலு தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சுதனும் அவரது நண்பர்களும் வேலுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் வேலு மயங்கி விழுந்தார். பின்னர் அவரது சட்டை பையில் இருந்த 150 ரூபாய் பணத்தை எடுத்துள்ளனர். அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு சென்று 50 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி வேலு உடல் மீது ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுதனை கைது செய்தனர். அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.