
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி என்னும் பகுதியில் 19 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவி தனது தோழிகளுடன் நேற்று கல்லூரிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேனில் வந்த ஒருவர் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி கடத்தி சென்றார். உடனடியாக உடனிருந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மாணவியை கடத்தி சென்றவர் அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த நந்தன் என்று தெரிய வந்தது. இவர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததால் கடத்தி சென்றார் என்று கூறப்படுகிறது. அதோடு மாணவியின் செல்போன் அரவக்குறிச்சி அருகே ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லூரி மாணவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.