
உத்திரபிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் யாரும் மசூதிக்கு செல்ல வேண்டாம் என்று அந்த மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்பிறகு பாஜக பெண் எம்எல்ஏ ஒருவர் இந்துக்களை பாதுகாக்க மருத்துவமனைகளில் முஸ்லிம்களுக்கு தனி வார்டு ஒதுக்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தின் அலிகர் தொகுதி பாஜக எம்பி சதீஷ் கவுதம் தனக்கு முஸ்லிம்கள் வாக்கு தேவை இல்லை என்று தற்போது கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் தொகுதியில்ஒரு முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ள நிலையில் இங்கு 40 சதவீதம் இஸ்லாமியர்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள அலிகர் பல்கலைக்கழகத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடுவது தொடர்பாக ஒரு பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அது தொடர்பாக அந்த தொகுதியின் பாஜக எம்பி ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், நான் இந்துக்கள் ஓட்டு போட்டதால்தான் இந்த தொகுதியில் மூன்று முறை எம்பி ஆகியுள்ளேன்.
மீண்டும் நான் நான்காவது முறையாகவும் எம்பி ஆவேன். எனக்கு அதற்கு இஸ்லாமியர்களின் ஓட்டு தேவை இல்லை இந்துக்களின் ஓட்டு மட்டுமே போதுமானது. எனக்கு ஒரு முஸ்லிம் ஓட்டு கூட தேவையில்லை. இனி முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் அனைத்து இந்துக்களின் பண்டிகையும் கொண்டாடப்படும். முதலில் ஹோலி பண்டிகையை கொண்டாட அவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது சம்மதம் தெரிவித்துள்ளனர்.மேலும் இங்கு படிக்கும் மாணவர்கள் உயர் பொறுப்புக்கு செல்ல வேண்டுமே தவிர யாரும் மத கலவரங்களை உருவாக்க கூடாது என்று தன் அறிக்கையில் கூறியுள்ளார்.